காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் 5 பேர் ராஜினாமா? முதல்வருடன் அவசர சந்திப்பு

காவிரிப் பிரச்னையில் ஆரம்பம் முதலே மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறவர்கள் நாடாளுமன்ற அ.தி.மு.க எம்.பி-கள் மூவர். திருச்சி தொகுதியின் குமார், கடலூர் தொகுதியின் அருண்மொழித்தேவன், அரக்கோணம் தொகுதியின் ஹரி. இவர்களுடன் ராமநாதபுரம் தொகுதியின் அன்வர் ராஜாவும் இப்போது சேர்ந்திருக்கிறார். டி.டி.வி.தினகரன் கோஷ்டி சார்பில் இருக்கும் ஒரே எம்.பி கோவை தொகுதியின் நாகராஜன். இவர்கள், ஐவரும் இன்று மாலைக்குள் காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்துக்குப் பாதகமான முடிவை எடுத்தால், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்கள். 
அதிமுக எம்பி-க்கள்

குமார், அருண்மொழித்தேவன் மற்றும் ஹரி ஆகியோர் இன்று மதியம் 12 மணியளவில் முதல்வரின் அறைக்கு வெளியே காத்திருந்தனர். முதல்வரைச் சந்தித்துவிட்டு, தங்களது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதே நேரம், அன்வர் ராஜாவும் டெல்லியில் மக்களவை சபாநாயகரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக அ.தி.மு.க எம்.பி-கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதேபோல், தினகரன் கோஷ்டியின் எம்.பி நாகராஜனும் சபாநாயகரைச் சந்திக்க நேரம் கேட்டுவிட்டு காத்திருக்கிறாராம். 

சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு அமர்ந்திருந்த எம்.பி-கள் மூவரைச் சந்தித்தோம். அவர்களில், ஹரி மற்றும் குமார் எம்.பி-க்கள் நம்மிடம் பேசும்போது, ``கடந்த 17 நாள்களாக நாடாளுமன்றத்தை நாங்கள் முடக்கி நடத்தவிடாமல் செய்தோம் என எங்களைப்பற்றி அவதூறுகளைச் சிலர் கிளப்பிவிட்டனர். அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் காவிரி ஆற்று நீரின் உபயோகம் பற்றி நன்கு தெரிந்தவர். தொகுதி மக்களின் உள்ளக்குமுறலைத்தான் வெளிப்படுத்தினேன். கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நிச்சியமாக மதிக்காது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள `ஸ்கீம்' என்கிற வார்த்தையை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தப்போகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் என்கிற வார்த்தையைத்தான் நாங்கள் ஸ்கீம் என்று சொல்கிறோம். அதைத்தான் நாங்கள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இன்று மாலையுடன் உச்சநீதிமன்ற கெடு முடிகிறது. அதற்குள் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று காத்திருக்கிறோம். ஒருவேளை, மத்திய அரசு மௌனம் சாதித்தாலோ, நீதிமன்றத்தில் ஏதாவது மனுத்தாக்கல் செய்து காலதாமதம் செய்யும் நடவடிக்கையில் இறங்கினாலோ..என்னைப்போன்ற எம்.பி-க்கள் சும்மா விடமாட்டோம்" என்று சொல்லி முடிப்பதற்குள் முதல்வரின் செயலாளர் அவரை அழைத்தார். உடனே அவசரமாகக் கிளம்பிப் போனார்.

அதே நேரத்தில், அன்வர் ராஜாவும் நாகராஜனும் முதல்வரைச் சந்திக்காமலேயே டெல்லியில் வைத்து தங்கள் முடிவை இன்று மாலைக்குள் அறிவிக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி ஒருவேளை பி.ஜே.பி. அரசுக்கு ஆதரவான முடிவுகளை எடுத்தால், மேலும் சில எம்.பி-க்கள் அந்த லிஸ்ட்டில் இடம்பெறக்கூடும் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

0 comments:

Post a Comment