சுங்க வரி குறைப்பு; எல்.இ.டி., 'டிவி' விலை குறையும்

மத்திய அரசு, 'டிவி பேனல்' இறக்குமதி வரியை பாதியாகக் குறைத்துள்ளது. இதனால், எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., 'டிவி' விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிப்., 1ல் தாக்கல் செய்த, 2018 -- 19ம் நிதியாண்டு பட்ஜெட்டில், டெலிவிஷன் தயாரிப்பிற்கு அவசியமான, 'டிவி பேனல்' இறக்குமதிக்கு, 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, இரு ஆண்டுகளாக, 'டிவி' விற்பனை மந்தமாக உள்ள நிலையில், 'டிவி பேனல்' இறக்குமதி வரி உயர்வு, சந்தையை மேலும் பாதிக்கும். 'டிவி' விலை உயரும் என்பதுடன், தேவையும் குறையும் என, 'டிவி' தயாரிப்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.இதையடுத்து, 'டிவி பேனல்' இறக்குமதி வரியை குறைக்குமாறு, மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

இதனிடையே, சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள், எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., 'டிவி' விலையை, 6 சதவீதம் உயர்த்தின.எல்.ஜி., சோனி உட்பட, மேலும் பல நிறுவனங்கள், ஏப்., 1 முதல், 'டிவி' விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம், 'டிவி பேனல்' இறக்குமதி வரியை பாதியாகக் குறைத்து உள்ளதாக அறிவித்துள்ளது.'பொதுமக்கள் நலன் கருதி, 15.7 அங்குலம் மற்றும் அதற்கு மேற்பட்ட, எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., 'டிவி பேனல்' தயாரிப்பில் பயன்படும், 'ஓபன் செல்' உபகரண இறக்குமதிக்கான வரி, 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது' என, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால், எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., 'டிவி' விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில், எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., 'டிவி'யின் பங்கு, 95 சதவீதமாக உள்ளது. 'டிவி பேனல்' இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில், 'டிவி' தேவை பெருகும்; தயாரிப்பும் சூடுபிடிக்கும்; வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு டிசம்பரில், 'டிவி' மற்றும் எல்.இ.டி., விளக்கு ஆகியவற்றுக்கான சுங்க வரி, 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஸ்மார்ட்போன் இறக்குமதி வரியும், 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. மைக்ரோவேவ் ஓவன் இறக்குமதி வரி, 20 சதவீதம் உயர்த்தப்பட்டது.'டிவி' கேமரா, வீடியோ சாதனங்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி, 10 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக அதிகரிக்கப் பட்டது.'டிவி' நிகழ்ச்சிகளை காண்பதற்கு பயன்படும், 'செட்டாப் பாக்ஸ்' சாதனங்கள் இறக்குமதிக்கான சுங்க வரி, 20 சதவீதமாக, இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.உள்நாட்டில், இந்த சாதனங்களின் தயாரிப்பை ஊக்குவிக்கவும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும், இந்த வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு, 'டிவி பேனல் ஓபன் செல்' உபகரணங்களுக்கான இறக்குமதி வரியை, 5 சதவீதம் குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது. இது, உள்நாட்டில், 'டிவி' தயாரிப்பு திறனை உயர்த்தும். நுகர்வோர் மின்னணு துறை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகள் உருவாகவும் துணைபுரியும்! 

0 comments:

Post a Comment