எடப்பாடி பழனிசாமியின் காவிரி நாடகம் ஆரம்பம்

மத்திய அரசுக்கு எதிராக நேரடியான வார்த்தைகளைப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ' தமிழகத்தில் உருவாகியிருக்கும் மோடி எதிர்ப்பு அலையை அறுவடை செய்ய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி
. நாளை ஆட்சி பறிபோனாலும் காவிரியை ஓர் உதாரணமாகக் காட்ட முடியும். எனவேதான், நமது அம்மா நாளிதழிலும் மோடிக்கு எதிராக எழுதத் தொடங்கியுள்ளனர்' என்கின்றனர் ஆளும்கட்சி வட்டாரத்தில். 


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. தி.மு.க உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் களமிறங்கியுள்ளன. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன், ' எங்களுக்குத் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று எங்களை வற்புறுத்துகிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்பட முடியவில்லையென்றால், இங்கு சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது?' என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, நேற்று கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், பொள்ளாச்சி எம்.பி மகேந்திரனுக்கு கூரியரில் எலி விஷத்தை அனுப்பியிருந்தார். '

தற்கொலை செய்து கொள்ளும் முடிவிருந்தால், உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை' என்பதையும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் அந்த சமூக ஆர்வலர். காவிரிக்காகத் தமிழகம் தகிக்கத் தொடங்கியிருப்பதை உணர்ந்த எம்.பிக்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். எம்.பிக்களின் நோக்கம் குறித்து, உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தகவலைப் பெற்றிருந்த முதல்வர், ' நீங்களாகவே முடிவு செய்துவிட்டு, என்னிடம் வந்து ஒப்புதல் வாங்க நினைக்கிறீர்களா? எதை எப்போது செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். தொகுதிக்குச் சென்று கட்சிப் பணியைச் செய்யுங்கள்' எனக் கோபத்தை வெளிக்காட்டினார். 


இதன்பின்னர் நேற்று மாலை டெல்லியில் பேட்டியளித்த அ.தி.மு.க எம்.பி முத்துக்கருப்பன், "காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். நாடாளுமன்ற அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன். வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றமில்லை. காவிரி விவகாரம் குறித்து பிரதமர் மோடி, அமித் ஷா ஆகிய இருவரிடமும் வலியுறுத்தினேன். காவிரிக்காகப் போராடிய ஜெயலலிதா அளித்த பதவியை ராஜினாமா செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களுக்குத் தண்ணீர் கிடைக்காதபோது பதவி எதற்கு? எம்.பி. என்ற முறையில் என்னால் இயன்றவரைப் போராடினேன். எனது முடிவு குறித்து சக எம்.பி-க்களுடன் பேசுவேன். எனினும் கட்சித் தலைமை கோரினால் ராஜினாமா முடிவு குறித்து ஆலோசிப்பேன்" என்றார். ராஜினாமா முடிவை உறுதியாக அறிவிக்காத முத்துக்கருப்பனின் பேச்சு, அரசியல்ரீதியாக விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

அதேநேரம், ' 'காவிரி பிரச்னைக்காக ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்' என இரண்டே வரிகளில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதிலும் மத்திய அரசைக் கண்டித்து எந்த வரிகளும் இல்லாதது, பொதுமக்களிடையே கொதிப்பை உண்டாக்கியது. அரசின் தயக்கம் குறித்துப் பதிவிட்ட பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ' ரெய்டு வந்துவிடும் என்ற பயமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அரசியல்ரீதியாக உருவாகும் அழுத்தத்தையடுத்தே, இன்று ட்விட்டரில் பதிவிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ' தமிழக மக்களுக்கும், இந்திய நீதித் துறைக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் மத்திய அரசின் வேதனையளிக்கும் நடவடிக்கையைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், 3.4.2018 - செவ்வாய்க் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்' என அறிவித்தார். மத்திய அரசுக்கு எதிராக நேரடியான வார்த்தைகளை பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார் துணை முதல்வர். 

பிரதமர் மோடியின் செயல்பாடுகளை ஆளும்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழும் விமர்சித்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், " பா.ஜ.கவுக்கு எதிராக ஆளும்கட்சியினர் நேரடியான விமர்சனங்களை முன்வைப்பதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. எம்.பிக்களின் ஆவேசப் பேச்சுக்கு எதிராக தமிழக அரசின் பிரதிநிதிகள் மௌனம் காப்பது கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க உள்பட அனைத்துக் கட்சிகளும் உருவாக்கக் கூடிய பா.ஜ.க எதிர்ப்பு அலையை, ஆளும்கட்சிதான் அறுவடை செய்ய வேண்டும் என நினைக்கிறார் முதல்வர். ' 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் ஆட்சி வரக் கூடும்' என்ற பேச்சு உருவாகியிருக்கிறது. ஒருவேளை தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு ஏதேனும் ஒரு முடிவை எடுத்தால், ' காவிரிக்காக நாங்கள் மோதினோம். அதனால்தான் ஆட்சி பறிபோனது' என மக்கள் மத்தியில் பிரசாரத்தை முன்னெடுக்க முடியும். அதன்மூலம் தன்னுடைய தலைமையை வலுவாக்கிக் கொள்ள முடியும் எனக் கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. 


நமது அம்மா நாளிதழும் காவிரி விவகாரம் குறித்து, ' பா.ஜ.கவுக்கு தமிழ்நாட்டில் ஓர் இடம்கூட கிடைக்காது. விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்' எனக் குறிப்பிட்டிருக்கிறது. முதல்வர் சொல்லாமல் நமது அம்மா நாளிதழிலில் இப்படியொரு கருத்து எழுதப்படுவதற்கு வாய்ப்பில்லை. மோடிக்கு எதிராக ஸ்டாலின் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அவருக்குச் செக் வைக்கும் வகையில் மத்திய அரசுடன் நேரடி மோதல்போக்கை வெளிக்காட்டத் தொடங்கியிருக்கிறார் முதல்வர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுமீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளது. 

இதன்பின்னணியில் சில நுட்பமான விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. தமிழக அரசின் எதிர்ப்பை பா.ஜ.கவும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. 'பா.ஜ.கவை எதிர்ப்பது நமக்குத்தான் லாபம்; அரசியல் மையத்தை ஸ்டாலினிடம் இருந்து கைப்பற்றுவதற்கான யுக்தி இது' என அமைச்சர்கள் பேசி வருகின்றனர். தமிழக அரசின் மோடி எதிர்ப்பு என்பது, தற்காலிகமா...நிரந்தரமா என்பது போகப் போகத்தான் தெரியும்" என்றார் விரிவாக.

0 comments:

Post a Comment