"காவிரி: 'ஜல்லிக்கட்டு வாலிபர்கள்தான்' நிரந்தர தீர்வை ஏற்படுத்த முடியும்"

காவிரி பிரச்னையில், ஆறு வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே மதிக்காத மத்திய அரசு, தமிழக அரசின் சீராய்வு மனுவையா மதிக்கப்போகிறது என்று டி.டி.வி. தினகரனின் முன்னாள் ஆதரவாளரும், இலக்கியப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவான ஆறு வார காலத்திற்குள் அமைக்கவில்லை. இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில், தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தை சட்டரீதியாக அணுகுவது என்றும், மார்ச் 31-ம் தேதியன்று தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தேர்தலை கருத்தில் கொண்டே, அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரசும், மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி-யும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காவிரிப் பிரச்னை தொடர்பாக கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத், "தமிழ்நாட்டை மாற்றான்தாய் மனப்பான்மையோடுதான் மத்திய பி.ஜே.பி. அரசு நடத்துகிறது. ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கிறது மத்திய சர்க்கார். கர்நாடகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அந்தக்காரியம் முடியாமல், எந்த வாரியமும் அமைக்க மாட்டார்கள். ஆகவே, கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்று பி.ஜே.பி. திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் கர்நாடகத்தில் ஜெயிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறது. ஆகவே, காங்கிரஸ், பி.ஜே.பி. போன்ற தேசியக் கட்சிகள் கர்நாடகத்திற்கே கவரிகள் எடுத்து வீசுகிறார்கள். தமிழ்நாட்டை அந்தக் கட்சிகள் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை.

தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாவிட்டாலும், ஆண் பிள்ளையானாலும், சாண் பிள்ளை என்று சாதித்துக் காட்டுவதற்கு அன்றைக்கு வாழப்பாடி ராமமூர்த்தி என்பவர் இருந்தார். காவிரிப் பிரச்னைக்காக அவர் தன் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், இன்றைக்கு 'தற்கொலை செய்துகொள்வேன்; ராஜினாமா செய்து கொள்வேன்' என்று சொல்லுபவர், அவற்றைச் செய்ய மாட்டேன் என்கிறார்.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, கடந்த 42 நாள்களில் அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியதற்குப் பிறகு, அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு, நாடாளும் பிரதமரைச் சந்திப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்னை வந்த பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பகிரங்கமாகப் பேசுவதற்கு தமிழக ஆட்சியாளர்களுக்கு ஆண்மையில்லை. கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமரை அனைத்துக் கட்சித் தலைவர்களோடு போய்ச் சந்தித்திருக்க வேண்டும். பிரதமரின் அப்பாயின்மென்டுக்காகக் காத்திருக்கக்கூடாது. ஒரு மாநிலத்தினுடைய முதலமைச்சர், பிரதமரைச் சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தால், பிரதமர் பதவியில் இருப்பவர் அதை அலட்சியப்படுத்த முடியாது.

'சந்திப்பதற்கு பிரதமர் எங்களுக்கு அனுமதி தரவில்லை' என்று சொல்லுகிற துணிச்சல்கூட இன்னும் தமிழக ஆட்சியாளர்களுக்கு வரவில்லை. முதலமைச்சரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'பிரதமரைச் சந்திப்பதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை' என்று செய்தியாளர்களிடம் போட்டு உடைக்கிறார். அப்போதும், பூசி மெழுகுகிறார்களே தவிர, 'பிரதமர்தங்களைச் சந்திக்க அனுமதி தரவில்லை' என இந்த நிமிடம்வரை அவர்கள் சொல்லவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தவிர, இனி இதற்கு வேறு தீர்வு கிடையாது. உச்ச நீதிமன்றம் 'கட் அண்ட் ரைட்டாக' 42 நாள்களுக்குள் இதற்கு ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னதற்குப் பிறகும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே மத்திய சர்க்கார் உதாசீனம் செய்கிறது என்று உரக்கச் சொல்லுகிற ஆண்மை இங்குள்ளவர்களிடம் இல்லை.

இப்போது இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு போடுவதாகச் சொல்கிறார்கள். இது இப்பிரச்னையை கால நீட்டிப்புக்கு வழிவகுக்குமே தவிர, எந்தத் தீர்வையும் எட்டாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே உதாசீனம் செய்தவர்கள், இந்த உதவாக்கரைகள் போடுகிற வழக்கையா கணக்கில் எடுக்கப்போகிறார்கள்? அந்த மனு மீது மத்திய அரசாங்கத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்கும். கர்நாடகத் தேர்தல் முடியும் வரை மத்திய அரசாங்கம், அதைக் கிடப்பில் போடும். இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு உதாசீனம் செய்து, தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளது என்று கூறி தமிழக அரசு வழக்கு போடுமா என்றால் கேள்விக்குறிதான்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவைப் பயிர் சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால் இனிமேல் காவிரியில் தண்ணீர் வரும்; தண்ணீர் கேட்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. கர்நாடகத் தேர்தலை மட்டும்தான் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்களே தவிர, தமிழக மக்களைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

0 comments:

Post a Comment