மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை: தொடங்கி வைத்தார் முதல்வர்

மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை: தொடங்கி வைத்தார் முதல்வர். காசநோய் பாதித்தவர்களுக்கு, சிகிச்சை பெறும் காலம் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

காசநோய் தினத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காசநோய் தடுப்புக்கான பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னையில் காசநோய் களப்பணியாளர்களுக்கு கையடக்க கணினியை வழங்கிய முதல்வர் பழனிசாமி, காசநோய் பாதித்த நோயாளிகள், சிகிச்சை பெறும் காலம் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்து வைத்தார்.

காசநோய் கண்டறியும் நடமாடும் பரிசோதனைக் கூட வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். காசநோயை கண்டறிய ரூ.1 கோடியில் நவீன கருவிகளுடன் கூடிய இந்த வாகனங்கள் பொதுமக்கள் கூடும் பகுதிகளில், மக்களுக்கு இலவசமாக காசநோய் பரிசோதனை செய்யும் பணியை மேற்கொள்ளவிருக்கின்றன.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், நோயற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. காசநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நோயற்ற வாழ்வுக்காக தமிழக சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நடமாடும் காசநோய் கண்டறியும் வாகனங்கள் இன்று கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் காசநோய் பாதித்தவர்களை எளிதில் பரிசோதனை செய்து கண்டறிய முடியும்.

காசநோயாளிகளின் சத்துணவுக்காக மாதந்தோறும் 500 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

எந்த ஆட்சியும் சந்தித்திராத சோதனைகளை சந்தித்தோம். சோதனைகளை படிக்கட்டுகளாக மாற்றி சாதனை படைத்தோம். கட்சியில் உழைத்து படிப்படியாக முன்னேறி இன்று முதல்வராகியுள்ளேன் என்றும் அவர் பேசினார்.

0 comments:

Post a Comment